பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு... விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை
Published on: 

பவானிசாகர்,

நீர்வரத்து அதிகரிப்பால் 8 மாதங்களுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வழியாக வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

வண்டல் மண் எடுக்க அனுமதி

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி காலை 8 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.37 அடி இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி மாலை 4 மணி நிலவரப்படி 49.83 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் நீர்த்தேக்க பகுதியில் படிந்திருந்த வண்டல் மண்ணை எடுப்பதற்கு அரசு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது.

இதனால் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அணையில் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வண்டல் மண்களை பொக்லைன் எந்திரத்தால் நிரப்பி டிப்பர் லாரி மற்றும் டிராக்டர் மூலம் எடுத்து சென்றனர். அணையின் நீர்மட்டம் குறைந்ததால் நீர்த்தேக்க பகுதியில் உள்ள கிராம மக்கள் நீர்த்தேக்க பகுதியில் வாழை, தட்டை, அவரை போன்ற பயிர்கள் நடவு செய்தனர்.

80 அடியாக உயர்வு

இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாத தொடக்கத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதன் எதிரொலியாக அணையின் நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் நீர்த்தேக்க பகுதியில் பயிரிட்ட ஆயிரக்கணக்கான வாழை மற்றும் பயிர்கள் நீரில் மூழ்கியது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி மதியம் 12 மணி நிலவரப்படி 80 அடியாக இருந்தது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மீண்டும் 80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 513 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 305 அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X