பக்கிங்காம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' : சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?

பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்தை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' : சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?
Published on

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்தை தாண்டி, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போக்குவரத்து வசதிகள் கூடுதலாக இருந்தாலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்த பாடில்லை.

தமிழ்நாட்டில் வாழும் 8½ கோடி மக்களில், சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்காக இப்படி ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருப்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து

இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்தை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஆறுகளில் கூவம், அடையாறு போன்றவை இயற்கையானவை. ஆனால், பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. 467 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய், தமிழ்நாட்டில் 210 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 257 கி.மீ. தூரமும் பாய்கிறது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஓடுவது பக்கிங்காம் கால்வாய்தான். 1935-ம் ஆண்டு வரை இதில் படகு போக்குவரத்து நடந்துள்ளது. அதற்கு ஆதாரமான நிழல் படங்கள் இன்றும் உள்ளன.

90 ஆண்டுகளுக்கு பிறகு...

பின்னாளில் இந்த கால்வாய் தூர்ந்துபோய் கழிவுநீர் ஓடையாகவே மாறிவிட்டது.

இந்த நிலையில், பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் பணியை கடந்த சில ஆண்டாகவே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது, 90 ஆண்டுகள் கடந்த நிலையில், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில், முதற்கட்டமாக முட்டுக்காடு - நேப்பியர் பாலம் வரை 30 கி.மீ. தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது.

டெண்டர்

தற்போது, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ. தூரத்திற்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.

பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கும்பட்சத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com