நேப்பியர் பாலம்-கோவளம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் - முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடக்கம்


நேப்பியர் பாலம்-கோவளம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் - முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடக்கம்
x

கோப்புப்படம் 

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘வாட்டர் மெட்ரோ' திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை படகு போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான (வாட்டர் மெட்ரோ) முதல்கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ‘நீர் மெட்ரோ' (வாட்டர் மெட்ரோ) என்பது மெட்ரோ ரெயில் போன்று, நவீன வசதிகளுடன் நீரில் மிதந்து செல்லும் ஒரு வகையான போக்குவரத்தாகும். கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொச்சி ஐகோர்ட்டு உட்பட மொத்தம் 16 வெவ்வேறு வழித்தடங்கள் உள்ளன. ஆனால் தற்போது கொச்சியில் 4 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோன்று, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘வாட்டர் மெட்ரோ' திட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை படகு போக்குவரத்து கொண்டு வரப்பட உள்ளது. வாட்டர் மெட்ரோவை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், பொது போக்குவரத்திற்கு செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படகு நிலையங்கள், பணிமனைகளுக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான பணிகளில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கொச்சியில் இருப்பது போன்று ‘வாட்டர் மெட்ரோ' ரெயிலைப் போலவே, சென்னையில் நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை 53 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் மெட்ரோவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர் மெட்ரோவை உருவாக்க கூவம் (நேப்பியர் பாலம்) மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்காம் கால்வாயை முதலில் மீட்டெடுத்து தூர்வார வேண்டும்.

கால்வாயை மீட்டெடுப்பதற்கும் நீர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கும் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும். நிதி ஆதாரம் விரைவில் முடிவு செய்யப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நகரத்தின் நிலப்பரப்பில் பெரிய மாற்றம் ஏற்படும்.

இது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து, நீர்வள ஆதாரத்துறை ஒரு ஆண்டுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பார்கள். இதற்கான முதல்கட்ட ஆய்வுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாநிலத்தில் 10 நீர்வழிகளை அடையாளம் காண அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

1 More update

Next Story