மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

15-ந் தேதி மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி விடும் வேகத்தில் உயர்ந்து வந்தது.

இதன் காரணமாக ஜூன் மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், ஜூலை 1-ந் தேதி கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு தண்ணீர் தொடர்ந்து 135 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதியுடன் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். அணை நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 62 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறப்பை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ஜனவரி 15-ந் தேதி மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசன தேவைக்காக 8.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com