மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்

டெல்டா பாசனத்திற்கு 45 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்
Published on: 

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று (வியாழக்கிழமை) நிறுத்தப்படுகிறது.

டெல்டா பாசனம்

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சூழ்நிலை நீடித்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் காவிரி டெல்டா பாசனத்திற்கு 45 நாட்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.

இவ்வாறு அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வந்தது.

நீர்வரத்து இல்லை

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் அணையின் நீர்மட்டம் 60.46 அடியாக சரிந்தது. தற்போதைய சூழலில் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லை. இருப்பினும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 44 நாட்களில் அணை நீர்மட்டம் 32 அடி குறைந்தது.

கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 91 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று மாலை 59.13 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 696 கனஅடியாக உள்ளது. அதே நேரத்தில் தண்ணீர்வரத்து குறைவால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நேற்று மாலை குறைக்கப்பட்டது.

இன்றுடன் நிறுத்தம்

டெல்டா பாசனத்திற்கு 45 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) 45 நாட்கள் நிறைவடைவதால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது இன்றுடன் நிறுத்தப்படும் சூழல் உள்ளது.

அதேநேரத்தில் காவிரி டெல்டா பாசன கடைமடை பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேவை உள்ளதால் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com