வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பாசன கால்வாய் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்வதால் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 2 மாதங்களுக்கும் மேலாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல் போகம் மற்றும் ஒருபோகும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,200 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. இதனால் அணையின் இரு கரைகளை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் பாசன கால்வாய் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் பாசன கால்வாயில் இறங்க முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் தண்ணீர் திறப்பால் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒருபாக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com