

தஞ்சை,
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை தாண்டி நேற்று காலை கல்லணையை எட்டியது. திறக்கப்பட்ட தண்ணீர் குறைவான அளவிலேயே வந்ததால் நேற்று மாலை வரை கல் லணை நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளின் ஓரமாக தண்ணீர் தேங்கி நின்றது.
இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.