

கரூர்,
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கரூர் வந்த நிலையில், மாயனூர் கதவணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
இதையடுத்து கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்துவிட்டார். முதல்கட்டமாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் பகுதிக்கு வந்தது.
பின்னர் நேற்று காலை மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 737 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 81 கனஅடியாக அதிகரித்தது.
இந்த தண்ணீர் காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரத்து 50 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.