சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
Published on: 

ஊத்துக்கோட்டை,

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 4.095 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 34 சதவீதம் ஆகும். வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3.231 டி.எம்.சி.யில் 592 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குடிநீர் வினியோகம்

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 440 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே குடிநீர் ஏரிகள் நிரம்பி அடுத்த ஆண்டு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் 1.881 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.

ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 225 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி.யில் 1.258 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 215 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.081 டி.எம்.சி.யில் வெறும் 124 மில்லியன் கனஅடி தண்ணீர், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 240 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.465 டி.எம்.சி.யில் 545 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com