

மதுரை,
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 20 அடி யாக சரிந்தது. இதன் காரணமாக குடிநீர் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதுடன், மதுரை மாநகராட்சிக்கான குடிநீர் வினியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி வீதம் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் ஆற்றுப்பாதையில் பலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி வந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தர வின்பேரில் பொதுப்பணித்துறை, மின்வாரியம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதன்பிறகு முல்லைப்பெரியாற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக வைகை அணையை வந்தடைய தொடங்கியது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாத நிலையில், தற்போது வினாடிக்கு 80 முதல் 85 கனஅடி வரை தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து குடிநீர் திட்டங்களுக்கு வழங்கப்படும் தண்ணீ ரின் அளவு வினாடிக்கு 40 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மூலம் மதுரை மாநகராட்சி, உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் தேனி மாவட்டத்தின் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு வழக்கமான அளவில் 50 சதவீத தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வரை அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் 50 சதவீத அளவில் மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். எனவே குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.