

சென்னை,
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 50 சதவீதம் நீர் இருப்பு குறைந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை -தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தற்போது உள்ள நீர் இருப்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியதால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இதுவரை பலத்த மழை பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 160 சென்டிமீட்டர் மழை பெய்யும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள் சென்னையில் குறைந்தபட்சம் 140 சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், நவம்பர் 10-ந் தேதி நிலவரப்படி 110 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 6 ஏரிகளிலும் தற்போது மொத்தம் 5.681 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதன்படி, 3.231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 584 மில்லியன் கனஅடி தண்ணீரும், 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.388 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பு உள்ளது. அதேபோல், 3.645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1.374 டி.எம்.சி. தண்ணீரும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 253 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. 1.081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 168 மில்லியன் கன அடி தண்ணீரும், 1.465 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரிகளில் மொத்தம் 10.892 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.