

தாயில்பட்டி,
சாலை அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாய் சேதம் ஆனதால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
சாலை அகலப்படுத்தும் பணி
தாயில்பட்டியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை இணைப்பு சாலை வரை நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கீழகோதைநாச்சியார்புரம், மேல கோதை நாச்சியார்புரம், ஆகிய பகுதிகளில் குழாய் பாலம் அகலப்படுத்தப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
விஜயகரிசல்குளத்தில் இருந்து வெம்பக்கோட்டை இணைப்பு சாலை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் அகற்றப்பட்டு மேம்பாலமாக மாற்றப்படுகிறது. இதற்காக தரைப்பாலம் முழுமையாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட இடத்தில் விஜயகரிசல் குளத்திற்கு செல்லும் மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் 2 கி.மீ. பைப் லைன் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் விஜயகரிசல் குளம் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.
குடிநீர் வினியோகம்
மேலும் மேம்பாலம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படாததால் குடிநீர் வினியோகம் செய்வது மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.
ஆகையால் அப்புறப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை தற்காலிகமாக மாற்றுப்பாதையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.