

சென்னை,
சென்னையில் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகரில் வருகிற 25, 26 ஆகிய 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரெயில் நிலையத்தில், புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வியாசர்பாடி மற்றும் பட்டேல் நகர் குடிநீர் பகிர்மான நிலையத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் வடக்கு பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் அன்று (25-ந்தேதி) காலை 9 மணியில் இருந்து மறுநாள் 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி வரை 2 நாட்கள் வியாசர்பாடி மற்றும் பட்டேல் நகர் குடிநீர் பகிர்மான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.
இதனால் மணலி மண்டலம் வார்டு 17 வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம் மற்றும் மாதவரம் மண்டலம் மேத்தா நகர், ராமச்சந்திரா நகர், முத்து மாரியம்மன் கோவில் தெரு, அன்னை சத்யா நகர், சந்திரபாபு காலனி பிரதான சாலை, மெஜஸ்டிக் காலனி, தணிகாசலம் நகர் 'எஸ்'பிளாக், பொன்னியம்மன்மேடு, தண்டையார்பேட்டை மண்டலம் கவியரசு கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர், கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், ஜே.ஜே.நகர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மணிக்குண்டு, காசிமேடு, ராயபுரம், சுப்பிரமணியம் தெரு, பெரம்பூர் பி.பி.ரோடு, பெரம்பூர், வியாசர்பாடி தெற்கு, கொருக்குப்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலம் மூலக்கடை, அயனாவரம் மாதவரம் ஹை ரோடு ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.