

சென்னை,
தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுக்கிணங்க, தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றில் 1,008.19 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 31-ந்தேதி முடிய 129 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமலும், மொத்த தேவையான 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் கார் பருவ சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றில் 1,008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதே போன்று தென்காசி மாவட்டம் கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் அக்டோபர் 31-ந்தேதி முடிய 129 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமலும், பாசன பருவ காலத்தின் மொத்த தேவையான 664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் பாசனம் பெறும் அரசபத்து, வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் 3,987.57 ஏக்கர் பாசனப்பரப்புகள் பயன் பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.