

சென்னை,
திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டலப் பாசனத்திற்கும், தளி வாய்க்கால் பாசனத்திற்கும் நாளை முதல் 60 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்களுக்கு நாளை முதல் 03.01.2027 வரை 60 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு, 3500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதேபோல், திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 3076.36 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும் உயிர் நீராக நாளை முதல் 03.01.2027 வரை, தகுந்த இடைவெளிவிட்டு, நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.