

மேட்டூர்,
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.
கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஒரு வாரகாலத்துக்கு பிறகு அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு நீர் வரத்து திறப்பை விட குறைவாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக குறைந்த நிலையில் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்தது. இதனால் கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு ஆனது 80 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.