'தொகுதி பங்கீட்டை மகிழ்ச்சியோடு ஏற்கிறோம்' - வைகோ பேட்டி

தி.மு.க.வுக்கு எப்போதும் அரணாக இருப்போம் வைகோ தெரிவித்துள்ளார்.
'தொகுதி பங்கீட்டை மகிழ்ச்சியோடு ஏற்கிறோம்' - வைகோ பேட்டி
Published on

சென்னை,

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் காங்கிரஸ் (28), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. - ம.தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டவுடன், வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“இந்த ஒதுக்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது. ம.தி.மு.க.வின் பதிவை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு தொகுதியில் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். தொகுதி ஒதுக்கீட்டில் சமரசம் எதுவும் இல்லை.

கருணாநிதி உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தபோது மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து சென்றார். நான் கருணாநிதியிடம் 'உங்களுக்கு எப்படி ஒரு காலத்தில் பக்கப்பலமாக உறுதுணையாக இருந்தேனோ, அதேபோல மு.க.ஸ்டாலினுக்கும் நான் உடன் அரணாக இருப்பேன்' என்றேன்.

அவர் உடனே எனது கைகளை பற்றிக்கொண்டார். திருச்சியில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இந்த சம்பவத்தை மு.க.ஸ்டாலின் உணர்ச்சிகரமாக, நெகிழ்ச்சியோடு கூறினார்.

தி.மு.க.வுக்கு அரணாக இருப்போம். ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர் என்று திருச்சியில் பிரதமர் மோடி பேசியிருப்பதாக கேட்கிறீர்கள். 2029-ம் ஆண்டுக்கு பிறகு அவர் பிரதமர் நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com