அன்றே அறிவித்தோம்: தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் அ.தி.மு.க. என்றும் முன்னோடி - இன்பதுரை எம்.பி.

மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்ற நிலைப்பாட்டை முன்பே எடுத்துரைத்ததாக இன்பதுரை எம்.பி. தெரிவித்தார்.
அன்றே அறிவித்தோம்: தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் அ.தி.மு.க. என்றும் முன்னோடி - இன்பதுரை எம்.பி.
Published on: 

சென்னை,

தமிழக நலன் கருதி மசோதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அன்றே அறிவித்தவர் எங்கள் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று இன்பதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆதரிக்கும்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 05.03.2025 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிமுக சார்பில் அண்ணன் ஜெயக்குமாரும், நானும் கலந்து கொண்டோம்.

'தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீதம் மக்களவைப் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்பட கூடாது; அவ்வாறு உறுதி செய்யப்படும் மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும்' என்ற கழகத்தின் நிலைப்பாட்டை அக்கூட்டத்திலேயே தெளிவாக எடுத்துரைத்தோம்.

முன்னோடி அ.தி.மு.க.

அதன் அடிப்படையில்தான், 16.04.2026 அன்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற முன்மொழிவை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்வைத்தபோது, அதன் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் இருந்து 7.23 சதவீதமாக உயர்வதுடன், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்து, தமிழக நலன் கருதி மசோதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அன்றே அறிவித்தவர் எங்கள் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் என்றும் முன்னோடி அ.தி.மு.க.!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X