

திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் மிகவும் கடினமாக இருக்கின்றன. இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் கடினமாக உள்ளன. துளையிடும் பணியை தொடர்வதில் சிக்கல் இருக்கிறது. உள்ளே செல்ல செல்ல பாறைகள் தான் இருக்கின்றன. சுமார் 40 அடி அளவுக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. கணித்தபடி இரண்டு ரிக் இயந்திரங்களாலேயே முழுமையாக பள்ளம் தோண்ட முடியவில்லை.
எதிபார்த்த வெற்றி கிடைக்குமெனத் தெரியவில்லை. ஒரு அங்குலத்தை விட கூடுதலாக குழந்தை மீது மண் விழுந்துள்ளது. குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை என்ற நிலையே தொடர்கிறது. திட்டமிட்டபடியான ஆழத்தை எட்ட முடியவில்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறோம். விரைவில் மாற்று வழி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம் என்றார்.