தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்: அமைச்சர் ஆர்.காந்தி

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம் என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்: அமைச்சர் ஆர்.காந்தி
Published on

கோவில் பணியாளர்களுக்கு உதவித்தொகை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஊதியம் இன்றி பணிபுரிபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வேலூர் செல்லியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), க.தேவராஜி (ஜோலார்பேட்டை), ஆ.நல்லதம்பி (திருப்பத்தூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), செ.வில்வநாதன் (ஆம்பூர்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்துசமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் பரஞ்ஜோதி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகள், ஊழியர்கள் என்று மொத்தம் 346 பேருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தான் முதல் சவாலாக காணப்பட்டது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டார். அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும், புதிதாக தொற்று ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன்காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் சூழ்நிலையிலும் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கி உள்ளோம். மேலும் தேர்தல் சமயத்தில் சொல்லாத ஒன்றான 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். உலக

நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் கொரோனா தடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிற்பாக செயல்பட்டார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதில், முன்னாள் எம்.பி. முகமதுசகி, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கோவில் செயல் அலுவலர்கள் ஜெயா, வஜ்ரவேலு, மாதவன் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் உதவி ஆணையர் விஜயா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com