அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்

முதல்-அமைச்சர் விஜய்க்கு தியாகம் என்றால் என்னவென்று தெரியாது என்று துரைமுருகன் கூறினார்.
அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்
Published on

வேலூர்,

வேலூர் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசாமல், சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட விவகாரங்களை முதல்-அமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட வழக்குகளில் பலரும் குற்றவாளிகள் அல்ல என்று கோர்ட்டில் விடுதலை செய்த பிறகு தான் அரசியல் செய்து வருகிறோம். இதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் கிடையாது.

அதோடு எங்கள் தலைவர் குறித்த பேச்சுக்கு, அனைத்து கட் சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை. சட்டசபையில் மரபையும் விதியையும் மீறி நடந்து கொண்டி ருக்கிறார் முதல்-அமைச்சர். அதை சபாநாயகரும் தடுக்க தவறி விட்டார். இதை காரணம் காட்டி முதல்-அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம்.

சட்டசபையில் நடந்ததையும், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததையும் திசை திருப்பவே கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதாம். நாங்கள் அரசியலில் மலை விழுங்கி மகாதேவன்கள். எத்தனையோ வழக்கை சந்தித்தவர்கள். முதல்-அமைச்சருக்கு தியாகம் என்றால் என்னவென்று தெரியாது.

15 நாட்கள் கூட சிறைக்கு சென்றது கிடையாது. அடித்த காற்றில் ஒரு இலை கோபுரத்துக்கு சென்றதன் விளைவு தான், இப்படி எல்லாம் அவர் பேசி வருகிறார். தியாகம் புரிந்தவர்களுக்கு தான் தியாகம் தெரியும். கம்யூனிஸ்டு கட்சியினர் தியாகம் புரிந்தவர்கள். என்றைக்கும் தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர்.

இந்த ஆட்சி கூத்துக்காரன் போன்று, ஜோதிடர் சொல்வதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், தி.மு.க.வுக்கு வெற்றி சிறகடித்து வரும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com