எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி


எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - தங்கம் தென்னரசுக்கு  எடப்பாடி பழனிசாமி பதிலடி
x
தினத்தந்தி 21 March 2025 4:25 PM IST (Updated: 21 March 2025 5:48 PM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் கணக்கை தங்கம் தென்னரசு பார்த்து கொண்டால் போதும் எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு ஒருவர் போட்டுக்கொண்டு இருப்பதாக கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பட்ஜெட் மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலுரையில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. அதனை மறைத்து சதவிகித அடிப்படையில் நிதியமைச்சர் பதில் அளித்து கொண்டிருக்கிறார். 73 ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ.5.18 லட்சம் கோடி. ஆனால் திமுக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த போது நிதி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த குழுவில் இருந்த நிபுணர்கள் கடந்த 4 ஆண்டுகளில் என்ன அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறார்கள்? அதன்படி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கடன் குறைந்திருக்கிறதா? என்று எதுவும் இல்லை. அதேபோல் தமிழக அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடன் வாங்கியது மட்டுமே திமுக அரசின் சாதனை. புள்ளி விவரங்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதேபோல் பட்ஜெட் கணக்கை நிதியமைச்சர் பார்த்து கொண்டால் போதும். எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். அதிமுகவுக்கு கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் வரும் போது அமைக்கப்படும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்போம். எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது " என்றார்.

1 More update

Next Story