மாஸ்டர் பிளான் செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம் டிடிவி தினகரன் ஆதரவாளர் பேச்சு

ஆர்.கே.நகரில் மாஸ்டர் பிளான் செய்து 20 ரூபாய் நோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #TTVDhinakaran
மாஸ்டர் பிளான் செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம் டிடிவி தினகரன் ஆதரவாளர் பேச்சு
Published on

கரூர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

தேர்தலில் பணநாயகம் வென்று உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரேபோன்று விமர்சனம் செய்யப்பட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஹவாலா முறையில் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிப்பெற்றார் என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவும் வெளியாகியது. இது தேர்தலை குறிவைத்தே வெளியிடபப்ட்டது எனவும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான ராஜசேகரன் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்காக செய்த சூழ்ச்சிகளை முறியடிக்க டி.டி.வி.தினகரனிடம் முறையிட்டதை அடுத்து தினகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுங்கள் எனக்கூறி வெற்றிவேலிடம் சி.டியை கொடுத்தார்.

வீடியோ காட்சியை வெளியிட வெற்றிவேல் தயங்கிய போது ஒரு வழக்கு தானே வரும் பார்த்து கொள்ளலாம் என தைரியம் கூறி அனுப்பி வைத்தோம். முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து மாஸ்டர் பிளான் செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற நிர்வாகிகள் தயாராக வேண்டும் என்று பேசினார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ஆராயிரம் ரூபாய் ஆளுங்கட்சியினர் கொடுத்த போது, தினகரன் அணியில் உள்ளவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் தோல்வி அடைந்துவிடுவோம் என்று பதற்றத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன் தெரிவித்த தகவல்கள் மீண்டும் சர்ச்சையை அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இன்று கரூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த டி.டி.வி.தினகரனிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், எனது ஆதரவாளர் ராஜசேகரன் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அப்படி அவர் பேசியிருந்தால் அது தவறு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிய சிகிச்சை வீடியோவை நான் வெற்றிவேலிடம் அளிக்க வில்லை, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com