'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திட்ட இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விருதுநகர் கலெக்டருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் கலெக்டருக்கு வாழ்த்துகள். கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். 'கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை' என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்பதை உறுதிசெய்வோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com