கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம் - தவெக

கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம் - தவெக
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், தவெக இதுவரையில் தனித்தே களமிறங்கியுள்ளது. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும், விஜய்க்கு எதிர்க்கட்சித்தலைவர் அல்லது துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

ஆனால் கூட்டணி தொடர்பான இத்தகைய பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

வதந்திகளை நம்ப வேண்டாம்!

சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடர்ந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com