

சென்னை,
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி 25-ம் தேதி தமிழ் மொழி தியாயகிகள் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 74 நூல்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. பன்னாட்டு கணினி தமிழ் கருத்தரங்க்ம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை. நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1,889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை 6,75,888 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நமது அரசின் திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒருபுறம் இருக்கிறது. மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. சோழர் அருங்காட்சியகம், நொய்யல், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் 287 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12-ம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் ஆசிரியர்கள், கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான பணிகளும் பத்து கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.