

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருத்தாச்சலம் மற்றும் தென்காசி தவிர கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16-ஐ திமுக ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்றதால் அந்த தொகுதியையும் கேட்டுள்ளோம்.
28 தொகுதிகளில் 23-ஐ அடையாளம் கண்டிருக்கிறோம். இன்னும் 5 தொகுதிகளை திமுகவுடன் அமர்ந்து பேசி முடிவு எடுப்போம். கன்னியாகுமரியில் உள்ள 6 தொகுதிகளில் 3-ல் போட்டியிட உள்ளோம். அதில் ஒன்றை கூட்டணியில் உள்ள தோழமை கட்சி கேட்கிறது . அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதால் அந்த தொகுதியை விட்டு கொடுக்க மாட்டோம். இது குறித்து தேசிய காங்கிரஸ் தலைமையிடம் பேசி முடிவு எடுப்போம். அது மட்டுமல்லாமல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு இருக்கும் பிரச்சினை குறித்து முதல்- அமைச்சருடன் பேசி அந்த பிரச்சினையை சரி செய்வோம் என்றார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.