போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்படும் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான தொகையை அரசு ஈடு செய்யவேண்டும். பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக போக்குவரத்து கழகம் வாய்மொழியாக தெரிவித்தது.

இந்த நிலையில் 3-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 5.45 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அதில், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு அறிவிப்பதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை முன்பணம் வழங்கப்படும். தொழிலாளர்கள் வேலைக்கு வந்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி முன்பணமாக நாளை ரூ.45 கோடி வழங்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையாக ரூ.251 கோடி வரும் திங்கட்கிழமை, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒருவேளை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com