‘கொள்கை எதிரிகளுடன் மோதியதால் கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்’ - மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் விஜய்க்கு தனது ஆட்சியின் மீதே நம்பிக்கை இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
‘கொள்கை எதிரிகளுடன் மோதியதால் கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்’  - மு.க.ஸ்டாலின்
Published on: 

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-

“இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. தவிர்க்க முடியாத காரணங்களால் நடக்கும் தேர்தலும் அல்ல. தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். 4 மாதங்களுக்கு முன்பு மதுராந்தகம் தொகுதி மக்கள் ஒருவரை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரும்பி வந்து வெட்கமில்லாமல் வாக்கு கேட்கிறார்.

அதுவும், 5 ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார். அதை சொல்லிவிட்டு அவருக்கு வாக்கும் கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா?

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வெற்றி பெற்ற கையுடன் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தது இதற்கு முன்பு நடந்ததே இல்லை. அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் இந்த தேர்தல் நடக்கிறது. ஆனால் முதல்-அமைச்சர் சொல்கிறார், “அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் த.வெ.க.வில் சேர்ந்தார்” என்கிறார். ராஜினாமா செய்யவில்லை என்றால் கட்சித்தவால் தடை சட்டம் பாய்ந்துவிடும். அதனால்தான் பொய்யான காரணத்தை சொல்லி சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே சி.எம். சார்?

மக்களை ஏமாற்றும் முதல்-அமைச்சருக்கும், மதுராந்தகம் தொகுதி மக்களை ஏமாற்றும் ஆளுங்கட்சி வேட்பாளருக்கும் தக்க பாடத்தை மதுராந்தகம் மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆளுங்கட்சிக்காரர்கள் எவ்வளவு திமிராக பேசுகிறார்கள். நாங்கள் ஒரு நாயைக் கூட த.வெ.க. சார்பில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்போம் என்கிறார்கள். என்ன கொடுமை? இதையெல்லாம் தமிழ்நாட்டில் கேட்கவே அசிங்கமாக, அருவெருப்பாக இருக்கிறது. இவர்களின் திமிரை மக்கள்தான் அடக்கி காட்ட வேண்டும்.

நாம் செய்தது ஒரே தவறுதான். தேர்தலுக்கு முன்பு த.வெ.க.வை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்துவிட்டோம். நமது கொள்கை எதிரிகளுடன் மோதியதால், இந்த கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். அதோடு சேர்த்து எஸ்.ஐ.ஆர். மூலம் பல லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்படி ஒரு சில காரணங்களால்தான் நமது வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

ஆனால் ஆட்சியமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. த.வெ.க. ஆதரவு அலை வீசியிருந்தால் 150 இடங்களிலாவது ஜெயித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான 118 கூட வரவில்லை. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவில்தான் இந்த ஆட்சி அமைந்தது.

எனவே முதல்-அமைச்சர் விஜய் என்னதான் ஹை பிட்ச்சில் கத்தினாலும், தி.மு.க.வுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளின் தயவால்தான் இந்த ஆட்சி நடக்கிறது. முதல்-அமைச்சர் அதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். அந்த எண்ணம் அவருக்கும் இருக்கிறது. அதனால்தான் ஆதரவு கட்சிகளை நம்பாமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி மறுபடியும் அவர்களை நிற்க வைத்து த.வெ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கப் பார்க்கிறார். உறுதியாக சொல்கிறேன், இதில் பல்வேறு குதிரை பேரங்கள் நடந்துள்ளன.

ஒரு பலவீனமான ஆட்சியை அமைத்திருக்கும் கட்சி, முடிந்தவரை நல்லது செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பார்க்க வேண்டும். எனவேதான் ஆறு மாதங்கள் பொறுத்திருப்போம் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது. இது தூய சக்தி ஆட்சி இல்லை, துயர சக்தி ஆட்சி.

மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்ததா? ஆவின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தனியார் கம்பெனிகள் விலையை ஏற்றிவிட்டார்கள். முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு டீ 10 ரூபாயாக இருந்தது, இப்போது அது 15 ரூபாய் ஆகிவிட்டது. அரிசி, சர்க்கரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அமைச்சர்கள் இங்கு வந்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் விஜய் அவரது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு கூட ஒருமுறைதான் சென்றிருக்கிறார். ஆனால் மதுராந்தகம் தொகுதிக்கு இரண்டு முறை வந்து தெருத்தெருவாக செல்கிறார். பொதுவாக முதல்-அமைச்சராக இருப்பவர்கள் இடைத்தேர்தல் குறித்து பெரிதாக கவலை கொள்ள மாட்டார்கள். பிரசாரம் செய்வதே அரிதுதான். அவர்கள் ஆட்சியின் மீதும், திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து, மக்கள் வாக்கு செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

ஆனால் இப்போது முதல்-அமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? அவருக்கே அவர் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. 2026 பொதுத்தேர்தலுக்கு முதல்-அமைச்சர் சென்ற பொதுக்கூட்டங்கள் மொத்தம் 10 கூட இருக்காது. அதுவும் வண்டியை விட்டு கீழே இறங்கக் கூட இல்லை. ஆனால் இடைத்தேர்தலுக்கு சந்துபொந்தெல்லாம் செல்கிறார். இப்போதுதான் அவரது கால் கீழே இறங்கியிருக்கிறது. உங்கள் பயம் எனக்கு பிடித்திருக்கிறது சி.எம். சார்.

ஐந்து நிமிடங்கள் பேசினால் அகிலமே ஆடிப்போய்விடும் என்று பேசிக்கொண்டிருந்தார். இன்று ஒரு தொகுதியில் வாக்கு வாங்குவதற்கே குட்டிக்கரணம் அடிக்கிறார். நாளை தாராபுரம் தொகுதிக்கு மீண்டும் சென்று ஷோ காட்டப்போகிறார். வாழ்க்கை ஒரு வட்டம்தான். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, இப்போது முதல்-அமைச்சருக்கு நன்றாக பொருந்துகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com