குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே கூட்டணியில் இணைந்தோம் - டிடிவி தினகரன்


குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே கூட்டணியில் இணைந்தோம் - டிடிவி தினகரன்
x

கூட்டணியை தலைமையேற்றிருக்கிற எடப்பாடி பழனிசாமியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். இதனை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேடையில் பேசியதாவது:-

தொடர்ந்து 3 முறை இந்தியாவின் பிரதமராக இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவை உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கிற பிரதமர், தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமமுக இந்த கூட்டணியில் வரவேண்டும் என்று விரும்பினார்.

இன்று நாங்கள் முழு மனதுடன் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமையேற்றிருக்கிற எடப்பாடி பழனிசாமியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். புரட்சித் தலைவர் வழி வந்தவர்கள். எங்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும், அமமுக முன்னேற்றத்தை கருதியும் பிரதமர் அழைப்பை ஏற்று, நாங்கள் மனதில் இருந்த கோபத்தை விட்டுவிட்டு, எந்த வித அழுத்தமும் இன்றி இன்று நாங்கள் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்ற உறுதியை பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், பங்காளிகளாக இருந்தவர்கள் நாங்கள், எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தது உண்மை. இன்று எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, மோடி தமிழ்நாட்டிலே மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டும், அம்மா ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று தமிழ்நாடே கொலை நாடாக, கொள்ளை நாடாக மாறி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை மருந்து பழக்கம். அனைத்தும் வேதனைக்குரியது. மக்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க துடித்துக்கொண்டிருக்கிறார். அந்த குடும்ப ஆட்சியை நாம் முறியடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story