மீனவர்களை விடுவிக்க போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செயல்பட வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

இதுவரை நமது மீனவர்களைக் காக்க எடுத்த தூதரக நடவடிக்கைகள் என்ன? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய பாஜக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிறையில் வாடும் மீனவர்கள்

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இலங்கை சிறையில் வாடும் நமது 9 ராமேஸ்வர மீனவர்களின் காவலை, ஊர்காவல்துறை நீதிமன்றம் 2-வது முறையாக வரும் அக்டோபர் 30 வரை நீட்டித்திருப்பது மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது. ஆயுத பூஜை நாளில் தங்களது வாழ்வாதாரப் படகுகளை வணங்கி வழிபட முடியாமல் மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் தவிக்கின்றன!

தூதரக நடவடிக்கைகள் என்ன?

பிரதமர் மோடி அரசும் வெளியுறவு அமைச்சகமும் இதுவரை நமது மீனவர்களைக் காக்க எடுத்த தூதரக நடவடிக்கைகள் என்ன? இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய பாஜக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன? வெறும் தேர்தல் விளம்பரங்களையும் வெற்று அறிக்கைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இந்த அரசு, தமிழக மீனவர் நலனில் காட்டும் மெத்தனம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தை இலங்கை வசம் அடகு வைத்துவிட்டு தில்லி அரசு மௌனம் சாதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செயல்பட வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com