

சென்னை,
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது 7 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி கட்சியின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், 6 தொகுதிகளை கண்டிப்பாக கேட்டுப்பெற வேண்டுமென கட்சியின் நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்தனர். இதையடுத்து, 17-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தி.மு.க.விடம் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தையில் முழுமை அடையவில்லை.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, தொகுதி பங்கீடு, வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், தி.மு.க. தரப்பில் தெரிவித்துவரும் கருத்துகள் குறித்து பேசப்பட்டது. இதேபோல, தி.மு.க.விடம் கண்டிப்பாக கடந்த முறை பெற்ற 6 தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதியை அதாவது 7 தொகுதியை கேட்டு பெற வேண்டும். இல்லையென்றால் 6 தொகுதிகளையாவது பெற்றிட வேண்டும். அதற்கு கீழ் கண்டிப்பாக தொகுதிகளை பெறக்கூடாது என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அப்போது சில நிர்வாகிகள், ஒருவேளை தி.மு.க. தரும் 5 தொகுதிகளை பெறும் நிலை ஏற்பட்டால் சென்னை புறநகரில் ஒரு தொகுதியை பெற வேண்டும். குறிப்பாக வேளச்சேரி, பெரம்பூர், வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்கலாம் என வலியுறுத்தப்பட் டது. இதில், பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே 3 முறை வெற்றிபெற்ற தால் அந்த தொகுதியை கேட்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று அல்லது நாளை தி.மு.க.வுடன் இறுதிகட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.