பாஜகவின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது.
அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், தன் கையில் தமிழ்க்கொடி ஏந்தி, ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே’ என்று முரசு கொட்டி, தன் வயதையொத்த மாணவர்களுடன் தேரோடும் திருவாரூர் வீதிகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஊர்வலமாகச் சென்றார்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களும் ஊட்டிய அந்த உணர்வு இன்று வரை நம் உள்ளத்தில் தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது. அன்று பள்ளி மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நோக்கம் என்னவோ, அதுதான் இன்று நம் கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது. மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது. இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது.
பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது.
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.
மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்.
பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி - ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன.
திமுகவின் இளைஞர்களும் மகளிரும் இந்தத் தேர்தல் களத்தில் அணிவகுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் போர்க்களத்தின் முன்கள வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சிக் களமும் மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறுகிற பல்வேறு நலத்திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் நலன் காக்கும் முன்னோடித் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இவற்றை மக்களிடம் வீடு வீடாகப் பரப்புரை செய்யும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பிலான மகளிர் குழுவினரின் பயணம் ஒவ்வொரு பாகத்திலும் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ளது.
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்‘ எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26 அன்று டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் கழக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். மகளிர் படையையும், இளைஞர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்திடும் வகையில் உங்களில் ஒருவனான நான் அந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறேன்.
வீடு வீடாகப் பரப்புரை, தொகுதிகள் தோறும் பொதுக்கூட்ட முழக்கங்கள், களத்தில் நிற்கும் கழகத்தினருக்குப் பயிற்சிக் கூட்டங்கள் என பிப்ரவரி மாதம் முழுவதும் தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பயணத்தைக் கழகம் மேற்கொள்ளும் நிலையில், அதன் முத்தாய்ப்பாகத் தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 8 அன்று, பத்து இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை - உறக்கமுமில்லை. நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.
போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.
உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.
வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்! திமுகவின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






