

திருச்சி,
திருச்சிக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இன்று மன்னர் 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
'சுவரன் மாறன்' என்றும் அழைக்கப்பட்ட 2-ம் முத்தரையர், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் வம்சத்து மன்னராவார். இவர் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு காவிரி டெல்டா பகுதியின் சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவ மன்னன் 2-ம் நந்திவர்மனுக்கு ஒரு வலிமையான சிற்றரசராகவும், கூட்டாளியாகவும் திகழ்ந்த இவர், மத்திய தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் முத்தரையர் சமூகத்தினரால் ஒரு கலாசார அடையாளமாகப் போற்றப்படுகிறார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு மரியாதை செலுத்துவதைப் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஒவ்வொரு பேரரசரும் சமூகம், சாதி, கோட்பாடு மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
எந்தவொரு மன்னரையும் மதம், சாதி, சமூகம், பிராந்தியம் அல்லது மொழியுடன் யாரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்தார்.