அரசியல் தலையீடு இல்லாமல் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்க வேண்டும் - டிடிவி தினகரன்

அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு, அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதல்-அமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்?

தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும்.

எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com