

சென்னை,
தமிழக சட்டசபையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ததை தொடர்ந்து, அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் க.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழக அரசின் வரவுசெலவு திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 847 கோடி. அதில், வருவாய் வரவுகள் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடி ரூபாய். வருவாய் செலவின் மதிப்பு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடி ரூபாய். எனவே வருவாய் பற்றாக்குறையின் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 490 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு செலவுகள் ரூ.26 ஆயிரத்து 90 கோடியாகவும், நிதி பற்றாக்குறை ரூ.44 ஆயிரத்து 481 கோடியாகவும் இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாகும். மாநில மொத்த உற்பத்தியில் கடன் அளவு 22.29 சதவீதமாக உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவுதான்.
நகர்ப்புற மேம்பாடு
மத்திய அரசின் அம்ருதி போன்ற திட்டங்களால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாநில அரசின் சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டமும், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமும் மீண்டும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னைக்கு ரூ.500 கோடியும், மற்ற நகரங்களுக்காக ரூ.750 கோடியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான மாற்றம் தென்படுகிறது. 2016-17-ம் நிதியாண்டில் 7.42 சதவீதமாக இருந்தது. 2017-18-ம் ஆண்டில் அது 8.02 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. எனவே வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை தாண்டிவிடும். இதனால் வரி வருவாயிலும் வளர்ச்சி ஏற்படும்.
கட்டுக்குள் உள்ளன
டாஸ்மாக் மூலமாக கிடைக்க வேண்டிய ஆயத்தீர்வை குறைந்துள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை தவிர மற்ற இனங்களில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் உள்ளது. இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசு அலுவலர்கள் ஊதிய உயர்வு, உதய் திட்டம் ஆகியவற்றால் நிதிச்சுமை கூடியது. இனிமேல் கிடைக்கும் கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலமாக அது சரி செய்யப்பட்டு, வருவாய் பற்றாக்குறையை குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கும். நிதி பற்றாக்குறையும், கடன் அளவும் கட்டுக்குள் உள்ளன. வருவாய் வரவுகள் அதிகரிக்கும்போது பற்றாக்குறை மேலும் குறையும்.
ரூ.44 ஆயிரம் கோடி கடன்
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலத்துக்கு ரூ.632 கோடியை மத்திய அரசு ஈடுகட்டியுள்ளது. ஆனால் மத்திய அரசின் நிதி இழப்பீடு இல்லாமலேயே 14 சதவீத வளர்ச்சியை தமிழக அரசு பெறும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
14-வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி, தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவில்தான் வரி வருவாய் பங்கு கிடைத்துள்ளது. மத்திய அரசு அளிக்கும் நிதியின் அளவு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தினாலும், வரி பகிர்வில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறைந்திருப்பதால் அதில் பெரிய லாபம் ஏற்படவில்லை.
எனவே மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, மானியம் மூலமாகவோ அல்லது திட்டங்களுக்காகவோ நிதியை வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். வரும் நிதியாண்டில் ரூ.44 ஆயிரம் கோடி கடன் வாங்கப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கடனளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யால் பயன்
ஜி.எஸ்.டி.க்கு முன்பு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 6.96 சதவீத வருவாய் வளர்ச்சி இருந்தது. ஜி.எஸ்.டி.க்கு பிறகு (ஜூலை முதல் பிப்ரவரி) வருவாய் வளர்ச்சியின் அளவு 7.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக அதன் அளவு 15.45 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.
இது எதிர்பார்த்ததைவிட, 4 முதல் 5 சதவீதம் உயர்வாகும். அவற்றில் 3 முதல் 4 சதவீதம் என்பது ஜி.எஸ்.டி.யால் கிடைத்திருக்கும் என்று கணிக்கலாம். இது ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் மாநிலத்துக்கு கிடைத்த பயனாகும். வரி வருவாய் ரூ.99 ஆயிரத்து 590 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த நிதியாண்டு முடிவில் அதன் அளவு, ரூ.98 ஆயிரத்து 693 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் வருவாய் குறைந்தது இதற்கு ஒரு காரணமாகும். ஆனாலும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள்கள் மூலம் அரசின் வருவாய் அளவு உயர்ந்து வருகிறது. இது எதிர்பார்த்ததை விட கூடுதலாகும். இதில் ரூ.1,600 கோடி கூடுதலாக கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
பெட்ரோலிய பொருட்கள்
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் முயற்சியை எதிர்க்கிறோம். மாநில அரசின் வரி வருவாய்க்கான முதுகெலும்பு அதுதான். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மக்கள் பயன் அடைவார்கள் என்றாலும், வரி வருவாய்களை கொண்டே அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியுள்ளது.
அம்மா உணவக திட்டத்துக்கு அரிசி இலவசமாக தரப்படுகிறது. பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் இதில் இழப்பு ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இலவச திட்டங்கள்
நமது மாநிலத்தில் இலவச திட்டங்கள் கிடையாது. அரசின் பல சமூக திட்டங்களுக்காக ரூ.72 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஆண்டொன்றுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. கடனுக்கான வட்டி ரூ.29 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு குறைந்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைப்படி ஆதாயமான விலை தரப்படும். சர்க்கரை ஆலைகளின் லாபப்பங்கும் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும். ஆனால் ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நியாயமான ஆதாய விலைக்கு மேல் அவர்களால் கொடுக்க முடியவில்லை.
முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு, அவர்கள் உருவாக்கித்தரும் வேலைவாய்ப்பு, துணைத்தொழில் தொடங்குவதற்கான ஊக்கத்தை பொறுத்து அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.