‘வீ த லீடர்ஸ்' கட்சி பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார், அண்ணாமலை

செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார்.
அண்ணாமலை
Published on

சென்னை,

புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.

தான் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

புதிய கொடி

இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

பிரமாண்ட மாநாடு

கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் 'வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com