தேர்தல் சுற்றுப்பயணம்: சட்டத்தை மதித்து நடப்போம் - த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு

விஜயின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். விஜய் சுற்றுப்பயணத்திற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உள்ளனர்.திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்து தான் பயணம் செய்ய வேண்டும். பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் சுற்றுப் பயணம் அனுமதி ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர்.
போலீசாரின் நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் கட்சிகளின் இதர பிரசாரத்திற்கு போலீசார் எளிதாக அனுமதி வழங்குகின்றனர். த.வெ.க. தலைவருக்கு மட்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கின்றனர் என தமிழகம் முழுவதும் த.வெ.க. நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைவர் விஜய், ஆளுங்கட்சி செய்வதை செய்யட்டும். நாம் அனைவரும் சட்டத்தை மதித்து நடப்போம். சட்டத்தை மீறி எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபடக் கூடாது.
தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருக்கும் மக்கள் சந்திப்பு தடைகளை கடந்து வெற்றியை நோக்கி நமது லட்சிய பயணம் தொடரும் என விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.






