அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்- புரட்சி பாரதம் அறிவிப்பு

திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆணவப்கொலைகள், சிறை படுகொலைகள் அதிகமாக நடக்கும் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும். சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை. வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து விட்டனர்.
ஆணவப்படுகொலையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆணவப்கொலைகள், சிறை படுகொலைகள் அதிகமாக நடக்கும். சமூக நீதி பேசுகின்ற திமுக ஆட்சியில் மனித உரிமை மீறப்படுகிறது. ஆணவப் படுகொலைக்கு தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும். இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன்.
திமுக ஏன் இந்த சட்டம் கொண்டு வர பயப்படுகிறது. இந்த கொலையை தடுக்காமல் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. கைதான சுர்ஜித் பெற்றோர் காவல்துறையில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட வேண்டும்.
சட்டமன்றத்தை உடனடியாக திமுக அரசு கூட்ட வேண்டும். ஆணவப்படுகொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த வழக்கில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ய கூடாது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆணவப்படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். காவல்துறை நடவடிக்கை முறையாக எடுக்கவில்லை. விசாரிக்கவும் இல்லை.
வருகிற சனிக்கிழமை நெல்லையில் கவினின் பெற்றோரை சந்திக்க உள்ளோம். இந்த வழக்கில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
திருவள்ளூர் கடத்தல் வழக்கில் முறையாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். எனக்கு கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை. என்னிடம் சட்ட உதவி தான் கேட்டனர். திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர்களை சந்திக்கும்படி தெரிவித்தேன். நான் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலர் உதவி கேட்பார்கள். நேரில் சந்தித்து மனு கொடுப்பார்கள். வேண்டுமென்றே வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள்.
போலீஸ் ஏடிஜிபி ஜெயராமுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அதிமுகவுடன் மட்டும் தான் கூட்டணியில் இருக்கிறோம். கொள்கை வேறு கூட்டணி வேறு. தேர்தலுக்கான கூட்டணி இது. அதிமுக கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வர வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






