

ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், அதன் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசகாந்த் செந்தில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழா
ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கடந்த ஜூலை 14-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 11 நாட்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் மற்றும் 56 தொண்டர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில், அவர்களுக்கு தலா ஒரு சைக்கிள் மற்றும் நினைவு பரிசையும் கே.எஸ்.அழகிரி வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்
பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவதுடன், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் எங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம்.தமிழக அரசை போன்று மத்திய அரசும் கலால் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறையும். ஆனால், வரியை குறைக்காமல் காங்கிரஸ் மீது மத்திய அரசு பழி சுமத்துகிறது. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு குழு அமைப்பதை விட நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கு தயங்குவது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.