உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் - வைகோ மே தின வாழ்த்து

மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

முதலாளித்துவ நுகத்தடியில் அடிமைகளாகப் பூட்டப்பட்டிருந்த உலகத் தொழிலாளர்கள் விடுதலை பெற்ற வீர வரலாறு பிரகடனம் செய்யப்பட்ட நாள்தான், ‘மே நாள்’ ஆகும்.

உதயசூரியன் உதிக்கும் அதிகாலை முதல், அந்தி சாயும் வேளை வரை தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைக்கு முடிவுகட்ட 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்கள் முதன் முதலில் 1806-ல் அமெரிக்க பிலடெல்பியா நகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவில் 1866-ல் உருவான தேசிய தொழிற்சங்கம், “எட்டு மணி நேரம் வேலை நாள்” என்பதை சட்டமாக்க வேண்டும் என்று போராடியது.

1877-ல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். 1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது எரிமலையென வெடித்தப் போராட்டங்கள்தான் மே நாள் எழுச்சியாக வடிவம் பெற்றன. 1886-ல் 8 மணி நேர வேலை நாளுக்கானப் போராட்டம் தீவிரமடைந்தது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

1886 மே முதல் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் உச்சத்தை எட்டியது. அரசின் அடக்குமுறை தர்பார் தலைவிரித்து ஆடியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 1886 மே 3, 4 ஆகிய நாட்களில் காவல்துறையினரின் தாக்குதல் எல்லை கடந்தன. சிகாகோ நகரில் உள்ள ‘ஹே மார்க்கெட்’ சதுக்கத்தில் கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடிய இந்த வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலி ஆயினர்.

தொழிலாளர் தலைவர்களான ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்சர் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11-ல் தூக்கிலிடப்பட்டனர். ‘ஹே மார்க்கெட் தியாகிகள்’ என்று வரலாறு போற்றுகின்ற தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் எட்டு மணி நேர இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, வைகோல் சந்தை சதுக்கத்திற்குச் சென்று அருகில் இருந்த கல்லறை தோட்டத்தில் அந்த நால்வரின் கல்லறைகளுக்கு புகழ் வணக்கம் செலுத்தினேன். 1889 மே முதல் நாள் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு 1890 மே முதல் நாள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப்பிடிக்கும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி, உயிர்ப் பலிகள் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமையான எட்டு மணி நேரம் வேலைநாள் என்பது உலகம் முழுவதும் சட்டமாக்கப்பட்டது. 1990-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் நாள் மாநிலங்களவையில் மே 1-ம் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அன்றைய தலைமை அமைச்சர் வி.பி.சிங் மே முதல் நாளை மத்திய அரசின் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார்.

இந்தியாவில் நாடு விடுதலை பெற்ற பின்னர் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்பதோடு, மே முதல் நாள் வாழ்த்துகளை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com