மாணவர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து துணை நிற்போம் - சி.டி.ஆர். நிர்மல் குமார்

தரமான சட்ட கல்வி அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
சட்டப் பல்கலைக்கழகம்,சி.டி.ஆர். நிர்மல் குமார்
Published on

சென்னை,

ஒவ்வொரு வருடமும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து, தமிழ்நாட்டில் அமைந்துள்ள 26 சட்டக் கல்லூரிகளில் (15 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் 11 தனியார் சட்டக் கல்லூரிகள், சேலம் மத்திய சட்டக் கல்லூரி நீங்கலாக) பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு பி.ஏ.எல்எல்.பி (B.A.LL.B) முறைசார் சட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையை, ஒருங்கிணைந்த ஒற்றை சாளர சேர்க்கை முறையில் நடத்தி வருகிறது.

சட்ட பட்டப்படிப்புகள்

மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகமானது, தனது சீர்மிகு சட்டப்பள்ளியின் வாயிலாக வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சிறப்பு சட்ட பட்டப்படிப்புகளான பி.ஏ.எல்எல்.பி.(Hons.), பி.பி.ஏ.எல்எல்.பி.(Hons.), பி.காம்.எல்எல்.பி.(Hons.) மற்றும் பி.சி.ஏ.எல்.எல்.பி. (Hons.) போன்ற (ஹானர்ஸ்) சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தி வருகிறது.

ஒதுக்கீட்டு ஆணை

இந்த விழாவில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமை தாங்கி, முதன்மை தரவரிசை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை நேரடியாக வழங்கி சிறப்புரையாற்றினார்.

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆப் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினோம்.

தரமான சட்ட கல்வி அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம். மாணவர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து துணை நிற்போம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com