

சென்னை,
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ், விசிக உடன் எங்களை ஒப்பிடக்கூடாது. காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல், தவெக கூட்டணிக்கு சென்றுவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து உறுதியாக நின்று, தேர்தல் களத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாக பணியாற்றி உள்ளோம். திமுகவிற்காக 34 தொகுதிகளில் நேரடியாக தீவிர பிரசாரம் செய்து எங்களின் முழு உழைப்பையும் கொடுத்தும்
கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் விட எங்கள் கட்சிக்கு குறைவான இடங்கள் அதுவும் அவர்கள் சின்னம் என்று திமுக நடந்து கொண்டது எங்கள் தொண்டர்கள் மத்தியில் ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது அதைத்தான் துரை வைகோ அவர்கள் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்
ஒரே ஒரு தொகுதியிலாவது தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாக கூறிவிட்டு, கடைசி நிமிடத்தில் அனைத்து இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என கூறிவிட்டனர். தங்களின் சொந்த கட்சியின் அடையாளத்தை விட்டுக்கொடுத்து, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தையும், சுயமரியாதை சிக்கலையும் ஏற்படுத்தியது.
ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டு கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். தேர்தல் வரும் பொழுது தான் இனி தேர்தல் கூட்டணியை பற்றி பேசுவோம்
இவ்வாறு அதில் கூறினார்.