தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்குவோம் - நயினார் நாகேந்திரன்

உண்மையில், முதல்-அமைச்சருக்கு தமிழகத்தில் நடப்பது எதுவுமே தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்குவோம் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

அ.தி.மு.க.-பாஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லிக்குச் செல்வதில் என்ன தவறு வந்து விட்டது?. டெல்லியில் வைத்து எவ்வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர்கள் எதற்காக டெல்லி சென்றார்கள் என்ற உண்மை நிலவரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியுமா?.

உண்மையில், முதல்-அமைச்சருக்கு தமிழகத்தில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், விளாத்திக்குளத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பாரா? மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், முதல்-அமைச்சருக்கு அதுவும் தெரியவில்லை.

இன்று (சனிக்கிழமை) மத்திய மந்திரி பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். அவர் வந்தவுடன், எங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நாங்கள் முறைப்படி தொடங்குவோம்.

நான் டெல்லிக்குச் செல்லவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தான் சென்னை வருகிறார். எனவே, எங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சென்னையில்தான் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com