காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்துவோம்: தமிழக அதிகாரிகள் தகவல்

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்துவோம்: தமிழக அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க வேண்டும்" என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் கர்நாடக அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.

ஆனாலும் கர்நாடக அரசின் போக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 25-ந்தேதி வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்ற விவரத்தையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்த மனு மீதும், ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இந்த உத்தரவின் அடிப்படையில் முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.

இந்த நிலையில், காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளையில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் என கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காரசார வாதங்கள் இருக்கும் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com