எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டுதான் பொதுமக்களை சந்திப்போம் -அமைச்சர் முத்துசாமி


எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டுதான் பொதுமக்களை சந்திப்போம் -அமைச்சர் முத்துசாமி
x

தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் விடுபட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசால் கீழடியின் உண்மை நிலை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கான நிதி மறுக்கப்படுகிறது. நீட் தேர்வு, இந்தி போன்றவை திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. தொகுதி வரையறை செய்யப்பட்டால் நமக்கு இருக்கிற உரிமை, எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்காகத்தான் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 70 நாட்களில், 7 லட்சம் தி.மு.க. நிர்வாகிகள் தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 68 ஆயிரம் பூத்களில் இதுவரை 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 622 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 57 சதவீதம் ஆகும். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள 816 பூத்களில் நாளை (அதாவது இன்று) காலை முதல் மாலை வரை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' என்ற உறுதிமொழியை எடுக்க உள்ளனர்.

தி.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பது தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தானே தவிர கட்சியில் சேர்ப்பதற்காக அல்ல. விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக முதல்- அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தால், மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் விடுபட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருப்பதால், எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தான் விட்டு தேர்தலுக்காக பொதுமக்களை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story