தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வியை உரிமையாக வழங்குகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்களுக்கான கட்டணத்தை முதலில் மாநில அரசு செலவழிக்கும். பின்னர் மத்திய அரசு அதை வழங்குகிறது.
இந்தநிலையில் தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்காரணமாக தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வில்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நிதி வழங்கவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மத்திய அரசிற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!... நன்றி தலைவா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






