எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம் என்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

திருவாரூர்,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்துவைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். தவறை தட்டிக்கேட்பவர். கும்பகோணம் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்தபோதே வகுப்பு தலைவர் செய்த தவறை தட்டிக்கேட்டார். எம்.ஜி.ஆர். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பார். தவறு செய்தவர்களை தட்டிக்கேட்பார்.

அந்த வகையில் தான் சார்ந்த கட்சியில் கணக்கு கேட்டதற்காக, தவறை தட்டிக்கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது குணத்தை மட்டும் மாற்றிக்கொள்ளாத கொள்கை விளக்காக அவர் திகழ்ந்தார். அவர் வழியில் ஜெயலலிதாவும் அரசியல் வாரிசாக செயல்பட்டார்.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் அதிக அழுத்தம் கொடுத்து, நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி பெற்றார். காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.

திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, பெண்களால் எதையும் சாதிக்க முடிகிறது என்று பேசியதோடு, எத்தனை இன்னல்கள் வந்தாலும், தடைகள் ஏற்பட்டாலும் யாருக்காகவும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை என்று கூறினார். அவருடைய வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com