ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள்: “யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

“ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான அ.ம.மு.க.வினர் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” என்று டி.டி.வி.தினகரன் பேசினார்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள்: “யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

ஸ்ரீவைகுண்டம்,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று செய்துங்கநல்லூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உள்ளார். உச்சநீதிமன்றம் சென்று இருந்தால், நிச்சயம் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்து இருக்கும். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்களை சந்திக்க வந்து உள்ளோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டு சென்றவர்களால் தேர்தல் வந்து இருப்பதாக கூறி வருகிறார். துரோகம் செய்தவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க. கொடியில் அண்ணா படத்தை எடுத்து விட்டு மோடி படத்தை போடும் அளவுக்கு வந்துவிட்டனர். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் என்பதால், மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் முதல்-அமைச்சராக இருந்தார்கள். அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்து முதல்-அமைச்சராக இருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்து முதல்-அமைச்சராக உள்ளார்.

இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்தபோது தான் வெற்றி சின்னம். துரோகிகளிடம் இருக்கும் போது அல்ல. இதனால் 2 முறை ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இங்கு பணம் கொடுக்க வருவார்கள். அவர்கள் டெபாசிட்டை காலி செய்ய வேண்டும்.

அ.ம.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி வைத்து உள்ளார்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார். நம் உடம்பில் ஓடுவது தி.மு.க. எதிர்ப்பு ரத்தம். உண்மையான அ.தி.மு.க. தொண்டன் தி.மு.க.வுக்கு எதிர்ப்பாகத்தான் இருப்பான். ஸ்டாலின் வேலையே இந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வைப்பது தான். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்தான் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்து உள்ளார்கள். கூட்டுறவு சங்க தேர்தலில் நாம் வெற்றி பெறக்கூடாது என்று தான் நினைத்து, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டனர். ஆட்சியை காப்பாற்ற தி.மு.க.வின் காலைக்கூட எடப்பாடி பழனிசாமி பிடிப்பார். இதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது. இவர்கள் நமக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. ஜெயலலிதா, அவரது தொண்டர்களுக்கும் துரோகம் செய்து உள்ளனர். ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று சொன்ன பா.ம.க., சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என்று சொன்ன தே.மு.தி.க.வுடன் கூட்டணி மற்றும் மோடியுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.

அ.தி.மு.க.வை அழிக்க மோடி துரோகிகளை கையில் எடுத்து உள்ளார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான அ.ம.மு.க.வினர் யாருக்கும் தலைவணங்க மாட்டோம். இந்த தேர்தலோடு மோடியும், எடப்பாடி பழனிசாமியும் முடிவுக்கு வந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com