

சென்னை,
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் தொண்டர்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- “திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும். கட்சியில் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. விசிக மட்டும் வளர நினைக்கவில்லை; ஒத்த கருத்துகளுடைய கட்சிகளுடன் சேர்ந்து வளர்கிறது.
தற்காலிக பின்னடைவாக இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொகுதிகள் பெறுகிறோம். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் பெருந்தன்மையோடு நடக்கிறோம். தமிழ்நாட்டு அரசியலின் மையம் நம்மை சுற்றியே இருக்கும் என்பதை வருங்காலம் உணர்த்தும்.
சீட் கேட்டு என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நிலை தொடர்கிறது. தலைமைக்கு நெருக்கடி இல்லாமல் முடிவெடுக்க கட்சியினர் வாய்ப்பு வழங்க வேண்டும். குறைந்த தொகுதிகள் கிடைப்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் உள்ளது. மக்கள் நல கூட்டணியில் 25 தொகுதிகள் கிடைத்தபோது, சுதந்திரமாக வேட்பாளர்களை தேர்வு செய்தோம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
“தற்போது வரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியும். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
கூட்டணி நலனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி செல்லாது. கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கூட்டணி நலனும் முக்கியம். தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை; இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மை.புதிய கூட்டணிக்கு வாழ்த்துகள். அவர்களின் இலக்குகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். போயஸ் கார்டனை நோக்கிச் செல்லும் நிலை மாறி, தற்போது டெல்லியை தேடி செல்லும் நிலையில் அதிமுக உள்ளது” என்றார்.